டிரான்ஸ்பார்மர் ஊழல்: சிபிஐ விசாரணையில் தவெக அரசு தலையிட அண்ணாமலை வலியுறுத்தல்..!

0
1

முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற டிரான்ஸ்பார்மர் ஊழல் வழக்கில், சிபிஐ விசாரணையைத் தடுக்க அரசு நிறுவனம் மேற்கொண்ட முயற்சிகளைச் சுட்டிக்காட்டி, தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தவெக அரசுக்கு அதிரடி கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் புதிதாகப் பதவியேற்றுள்ள தவெக அரசுக்கு, ஊழல் விவகாரத்தில் முதல் சவாலை விடுத்துள்ளார் அண்ணாமலை. கடந்த திமுக ஆட்சியில் மின்சாரத் துறை அமைச்சராகச் செந்தில் பாலாஜி இருந்தபோது, டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ததில் சுமார் 397 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகப் புகார் எழுந்தது. இந்த வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைத் தொடர்ந்து அண்ணாமலை காரசாரமான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

டிரான்ஸ்பார்மர் ஊழல் குறித்து சிபிஐ விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும், இது தொடர்பான அனைத்துக் கோப்புகளையும் சிபிஐ-யிடம் ஒப்படைக்கவும் அறிவுறுத்தியது. இதை எதிர்த்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TANGEDCO) உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. ஆனால், அந்த மனுவை இன்று தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், சிபிஐ விசாரணைக்குத் தடையுமில்லை எனக் கூறிவிட்டது.

இந்த விவகாரத்தை முன்வைத்து அண்ணாமலை தனது அறிக்கையில் தவெக அரசை நோக்கிக் கேள்விக் கணைகளைத் தொடுத்துள்ளார். “உயர் நீதிமன்றம் கோப்புகளை வழங்கச் சொன்ன பிறகும், ஒரு அரசு நிறுவனம் எதற்காகச் சிபிஐ விசாரணையைத் தடுக்க உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றது? யாரைக் காப்பாற்ற இந்த முயற்சி?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

முந்தைய அரசால் இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தாலும், தற்போது அமைந்துள்ள புதிய தவெக அரசுக்கு இது குறித்துத் தகவல் அளிக்கப்பட்டதா? இந்த மேல்முறையீட்டு விவகாரத்தில் முதல்வர் விஜய் உடனடியாகத் தலையிட வேண்டும். ஊழல் ஒழிப்பைத் தனது முக்கியக் கொள்கையாகத் தவெக அறிவித்துள்ள நிலையில், அதை நிரூபிக்க அண்ணாமலை ஒரு நிபந்தனையை விதித்துள்ளார்.

தமிழகத்தில் சிபிஐ விசாரணை நடத்த முந்தைய திமுக அரசு திரும்பப் பெற்ற ‘பொது ஒப்புதலை’ தவெக அரசு மீண்டும் வழங்க வேண்டும். அப்போதுதான் ஊழல் எதிர்ப்பு என்பதில் அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள் என்பதை மக்கள் நம்புவார்கள். முன்னாள் அமைச்சர் நேரு தொடர்பான வழக்குகள் உட்பட பல ஊழல் புகார்களில் லஞ்ச ஒழிப்புத் துறை இன்னும் முதல் தகவல் அறிக்கை (FIR) பதியாமல் இருப்பதை அரசு கவனிக்க வேண்டும்” என்றும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

திமுக-வின் ஊழல்களைத் தவெக அரசு எப்படிக் கையாளப் போகிறது என்பதைக் கண்காணிக்கப் போவதாக பாஜக அறிவித்துள்ளது. அண்ணாமலையின் இந்தக் கோரிக்கைக்குத் தமிழக முதல்வர் விஜய் என்ன பதில் சொல்லப் போகிறார்? சிபிஐ-க்கு மீண்டும் அனுமதி வழங்கப்படுமா? தமிழக அரசியலில் அடுத்தகட்ட நகர்வுகள் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.