செங்கல்பட்டில் மழையில் நனைந்த நெல் மூட்டைகள்

0
1

செங்கல்பட்டு மாவட்டத்தில் பெய்த மழையால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்த சம்பவம் விவசாயிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

முள்ளிப்பாக்கம் மற்றும் அருங்குன்றம் பகுதிகளில் செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் கொண்டு வந்த நெல் மூட்டைகள் திறந்தவெளியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் நேற்று பெய்த கனமழையால் பல நெல் மூட்டைகள் முழுவதுமாக நனைந்தன.

மேலும், திறந்த வெளியில் பரப்பி வைக்கப்பட்டிருந்த நெல் மணிகளும் மழைநீரில் மூழ்கி சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் விவசாயிகள் கடும் மனவேதனை அடைந்துள்ளனர். பல மாதங்கள் உழைத்து விளைவித்த நெல் மழையால் பாதிக்கப்பட்டதால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மழைக்காலத்தை முன்னிட்டு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததே இந்த சேதத்திற்கு காரணம் என விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

எனவே, மழையில் நனைந்த நெல் மூட்டைகளை உடனடியாக பாதுகாப்பான சேமிப்பு கிடங்குகளுக்கு மாற்றி, விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.