தமிழக அரசியலில் நீண்ட காலமாக திராவிட கட்சிகளின் ஆதிக்கம் நிலவி வரும் நிலையில், பிராமண சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அமைச்சரவை வாய்ப்பு கிடைத்திருப்பது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவையில், மயிலாப்பூர் தொகுதி எம்எல்ஏ பி. வெங்கடராமணன் அமைச்சராக பதவியேற்றுள்ளார்.
கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் திராவிட கட்சிகளின் ஆட்சி தொடர்ந்த நிலையில், பிராமண சமூகத்தினருக்கு அமைச்சரவை பதவி கிடைப்பது அரிதான நிகழ்வாகவே இருந்து வந்தது. இந்த நிலையில் தவெக அரசில் பி. வெங்கடராமணன் அமைச்சராக இணைந்திருப்பது முக்கிய அரசியல் மாற்றமாக பார்க்கப்படுகிறது.
தமிழக அரசியல் வரலாற்றில் பிராமண சமூகத்தைச் சேர்ந்த முக்கிய தலைவர்களில் சி. ராஜகோபாலாசாரி (ராஜாஜி) குறிப்பிடத்தக்கவர். அயங்கார் பிராமண சமூகத்தைச் சேர்ந்த அவர், காங்கிரஸ் கட்சியின் சார்பில் மதராஸ் மாகாண முதலமைச்சராக இரண்டு முறை பதவி வகித்தார். சுதந்திரப் போராட்ட வீரராகவும், இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரலாகவும் அவர் பணியாற்றியுள்ளார்.
அதேபோல், அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவும் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர். தமிழகத்தின் நீண்டகால முதலமைச்சர்களில் ஒருவராக இருந்த அவர், தனது ஆட்சிக் காலத்தில் பல்வேறு சமூகங்களுக்கு அரசியல் வாய்ப்புகளை வழங்கியிருந்தார்.
மேலும், எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் சுகாதாரத்துறை அமைச்சராக பணியாற்றிய எச்.வி. ஹண்டேவும் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தவெக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள பி. வெங்கடராமணன், தமிழக அரசியலில் புதிய விவாதங்களை உருவாக்கியுள்ளார்.




