விஜய் பதவியேற்பதில் தாமதமா? ஆதரவு கடிதம் தராததால் ஆளுநர் அதிருப்தி?

0
3

தமிழகத் தேர்தல் முடிவுகள் வெளியாகி தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்பதில் திடீர் சிக்கல் எழுந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநரைச் சந்தித்த விஜய், தனக்கு 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இருப்பதாகத் தெரிவித்திருந்தார். இருப்பினும், இது தொடர்பாகச் சில முக்கியத் தகவல்கள் கசிந்துள்ளன. பெரும்பான்மையை நிரூபிக்கத் தேவையான 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கடிதத்தை விஜய் இன்னும் ஆளுநரிடம் சமர்ப்பிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

ஆதரவு இருப்பதாக வாய்மொழியாக மட்டுமே விஜய் கூறியுள்ளதால், ஆட்சி அமைக்க உரிமை கோரிய அவரது கோரிக்கையில் ஆளுநருக்கு முழுமையானத் திருப்தி இல்லை எனத் தெரிகிறது. இதனால் நாளை பதவியேற்பு நடக்குமா என்பதில் ஒருவிதத் தாமதம் நிலவுகிறது.

ஆளுநர் மாளிகை வட்டாரங்களில் இத்தகைய தகவல்கள் நிலவினாலும், தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் இதைக் கடந்து அடுத்தகட்டப் பணிகளில் தீவிரமாக உள்ளன. திட்டமிட்டபடி நாளை (மே 07) காலை 11.30 மணிக்கு விஜய் தமிழக முதலமைச்சராகப் பதவி ஏற்க உள்ளதாக அக்கட்சித் தரப்பு உறுதியாகத் தெரிவிக்கிறது.

ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க ஏற்கனவே உரிமை கோரிவிட்டதாகவும், தேவையான ஆதரவு தங்களுக்கு இருப்பதாகவும் தவெக நிர்வாகிகள் கூறுகின்றனர்.

திமுக மற்றும் அதிமுக கூட்டணிகளில் இருந்து விலகி வரும் கட்சிகளின் ஆதரவோடு 118 என்ற மேஜிக் எண்ணை விஜய் எட்ட முயற்சி செய்து வரும் சூழலில், ஆளுநரின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதே தமிழக அரசியலின் தற்போதைய மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.