தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களின் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்பதாகத் தெரிவித்துள்ளார். இந்தத் தற்காலிகப் பின்னடைவில் இருந்து அதிமுக மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பும் என அவர் தொண்டர்களுக்கு நம்பிக்கை ஊட்டியுள்ளார்.
தேர்தல் முடிவுகள் குறித்து எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ஜனநாயகக் கடமையாற்றிய மக்களுக்கு நன்றிகளைத் தெரிவிப்பதோடு, மக்களே இங்கு நீதிபதிகள் என்பதை அதிமுக ஏற்றுக்கொள்கிறது.
மக்கள் வழங்கிய தீர்ப்பை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வதாகவும், புரட்சித் தலைவி அம்மாவின் வழியில் இந்தப் பின்னடைவிலிருந்து அதிமுக மீண்டு வரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எம்.ஜி.ஆர் மற்றும் அம்மாவின் ஆசியுடன் ஃபீனிக்ஸ் பறவை போல் அதிமுக மீண்டும் எழுச்சி பெறும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தேர்தல் களத்தில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்காகப் பிரச்சாரம் செய்த மற்றும் உழைத்த தலைவர்களுக்கு அவர் தனது நன்றியைப் பதிவிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, பியூஷ் கோயல், ஜே.பி. நட்டா மற்றும் நிதின் நபின் ஆகியோருக்குத் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.
நயினார் நாகேந்திரன் (பாஜக), டாக்டர் அன்புமணி ராமதாஸ் (பாமக), டி.டி.வி. தினகரன் (அமமுக), ஜி.கே. வாசன் (தமாகா), ஏ.சி. சண்முகம் (புதிய நீதிக் கட்சி), பாரிவேந்தர் (ஐஜேகே), ஜான் பாண்டியன் (தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்) மற்றும் ஜெகன்மூர்த்தி (புரட்சி பாரதம்) ஆகியோருக்குத் தனது நன்றியை உரித்தாக்கியுள்ளார்.
தமிழகத் தேர்தல் முடிவுகளில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 109 தொகுதிகளில் முன்னிலை பெற்று வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது. கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பின்னடைவைச் சந்தித்துள்ள நிலையில், அதிமுக 73 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. பாஜக போட்டியிட்ட 27 தொகுதிகளிலும் பின்னடைவைச் சந்தித்துள்ள சூழலில், எடப்பாடி பழனிசாமியின் இந்த அறிக்கை கூட்டணி தர்மத்தையும், கட்சி மீண்டும் எழுச்சி பெறும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறது.
ஏற்கனவே முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளரின் இந்த அறிக்கை தமிழக அரசியலில் ஒரு முதிர்ச்சியான அணுகுமுறையாகப் பார்க்கப்படுகிறது.





