முந்திச் செல்ல முயன்ற வாகனத்தால் விபத்து: பொத்தேரியில் இரு பெண்கள் படுகாயம்!

0
2

செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பெண்கள் மீது மற்றொரு வாகனம் மோதுவது போல் முந்திச் சென்றதால் ஏற்பட்ட விபத்தில், அந்தப் பெண்கள் இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தனர். விபத்தைத் தொடர்ந்து ஆம்புலன்ஸ் ஊழியர் ஒருவரை மட்டும் அழைத்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொத்தேரி பகுதியில் இரண்டு பெண்கள் ஒரு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, அவர்களைப் பின் தொடர்ந்து வந்த மற்றொரு நபர் தனது வாகனத்தில் இவர்களை முந்திச் செல்ல முயன்றுள்ளார். அப்போது மோத வருவது போல் மிக நெருக்கமாக அவர் முந்திச் சென்றதால், அதிர்ச்சியடைந்த அந்தப் பெண்கள் நிலைதடுமாறி சாலையில் விழுந்தனர். இந்த விபத்தில் இரு பெண்களுக்கும் கால் மற்றும் கை பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டன.

விபத்தைக் கண்ட அக்கம் பக்கத்தினர் மற்றும் பின்னால் வந்த வாகன ஓட்டிகள் உடனடியாக 108 ஆம்புலன்ஸிற்குத் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் காயமடைந்த ஒருவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார். ஆனால், பலத்த காயமடைந்த இருவரில் ஒருவரை மட்டுமே ஆம்புலன்சில் அழைத்துச் செல்ல முடியும் என்றும், மற்றொருவரை அழைத்துச் செல்ல முடியாது என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

மற்றொருவருக்குச் சிகிச்சை அளிக்க இன்னொரு ஆம்புலன்ஸை வரவழைக்க வேண்டும் என்று ஊழியர் கூறியதால், படுகாயமடைந்த மற்றொரு பெண் நீண்ட நேரம் சாலையிலேயே காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டது. உயிருக்குப் போராடும் நிலையில் இருந்தவரை உடனடியாக அழைத்துச் செல்லாமல் ஆம்புலன்ஸ் ஊழியர் இவ்வாறு நடந்து கொண்டது அங்கிருந்தவர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் அந்த இடத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது.