ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் தொடக்க கால சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் (Rajasthan Royals) அணியின் உரிமம் பெரும் தொகைக்குக் கைமாறியுள்ளது. உலகப் புகழ்பெற்ற மிட்டல் குடும்பம் மற்றும் அதார் பூனாவாலா ஆகியோர் இணைந்து இந்த அணியை வாங்குவதற்கான ஒப்பந்தம் தற்போது இறுதியாகியுள்ளது.
ஐபிஎல் அணிகளின் மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒரு மிகப்பெரிய வணிக ஒப்பந்தத்தின் மூலம் புதிய உரிமையாளர்களின் கைக்குச் சென்றுள்ளது. சுமார் $1.65 பில்லியன், அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.15,660 கோடி என்ற பிரம்மாண்டத் தொகைக்கு இந்த அணி விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்படி, அணியின் பெரும்பான்மைப் பங்குகளை (75%) மிட்டல் குடும்பம் தன்வசம் வைத்துக்கொள்ள உள்ளது. சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் அதார் பூனாவாலா இந்த அணியின் 18% பங்குகளை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளார்.
அணியின் தற்போதைய உரிமையாளரான மனோஜ் படாலே, மீதமுள்ள 7% பங்குகளைத் தொடர்ந்து தன்வசம் வைத்திருப்பாரெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இவ்வளவு பெரிய தொகைக்கு விற்பனையாகி இருப்பது கிரிக்கெட் மற்றும் வணிக வட்டாரங்களில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. மிட்டல் குடும்பம் போன்ற உலகத்தரம் வாய்ந்த தொழில் அதிபர்களின் வருகை, ஐபிஎல் தொடரின் மதிப்பையும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் எதிர்காலத்தையும் புதிய உயரத்திற்கு எடுத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மெகா டீல் மூலம் ராஜஸ்தான் அணி தனது அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி அடியெடுத்து வைத்துள்ளது.





