பெட்ரோலில் 85% எத்தனால் கலப்பு: மத்திய அரசின் அதிரடி வரைவு அறிக்கை – பொதுமக்களிடம் கருத்து கேட்பு!

0
2

இந்திய எரிபொருள் சந்தையில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், பெட்ரோலில் எத்தனால் கலப்பினை 85 சதவீதம் வரை அதிகரிப்பதற்கான புதிய வரைவு அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாகப் பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்து, அதன்பின் மோட்டார் வாகன விதிகளில் அதிகாரப்பூர்வமாகத் திருத்தங்களை மேற்கொள்ள மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. தற்போது பயன்பாட்டில் உள்ள பெட்ரோலில் எத்தனால் கலப்பு விகிதத்தை விடப் பலமடங்கு உயர்த்தி, புதிய வகைப்பாடுகளை மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளது.

இதில் 85 சதவீதம் எத்தனால் மற்றும் 15 சதவீதம் பெட்ரோல் கலக்கப்பட்டிருக்கும். இது 100 சதவீதம் தூய எத்தனால் (Pure Ethanol) எரிபொருளாக இருக்கும். இந்த இரண்டு புதிய வகைப்பாடுகளையும் ‘மத்திய மோட்டார் வாகன விதிகள், 1989’-ன் கீழ் அதிகாரப்பூர்வமாக இணைப்பதற்கான வரைவு அறிக்கையை அரசு வெளியிட்டுள்ளது. இது அமலுக்கு வரும் பட்சத்தில், வாகன உற்பத்தியாளர்கள் இந்த எரிபொருளுக்கு ஏற்றவாறு இன்ஜின்களைத் தயாரிப்பது கட்டாயமாக்கப்படும்.

புதிய வரைவு அறிக்கையின்படி, வெறும் எரிபொருள் கலப்பு மட்டுமல்லாது, அதனுடன் தொடர்புடைய புகை வெளியேற்ற தரநிலைகள் (Emission Norms) மற்றும் தொழில்நுட்ப அளவுருக்களும் (Technical Parameters) புதுப்பிக்கப்பட உள்ளன. குறிப்பாக, ‘Hydrogen + CN’ என்ற பழைய வகைப்பாடு இனி ‘Hydrogen + CNG’ என மாற்றம் செய்யப்பட உள்ளது. இதன் மூலம் பசுமை எரிபொருள் பயன்பாட்டை ஊக்குவிக்க அரசு தீவிரம் காட்டி வருகிறது.

இந்த முக்கியமான மாற்றத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பாக, ஜனநாயக முறைப்படி பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த வரைவு அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் பொதுமக்கள், வாகன உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் எரிபொருள் நிபுணர்கள் தங்களது ஆலோசனைகளையும், கருத்துக்களையும் அரசுக்குத் தெரிவிக்கலாம். இதன்பிறகு இறுதி அறிவிப்பு வெளியிடப்பட்டுச் சட்டம் நடைமுறைக்கு வரும்.

இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதிச் செலவை பெருமளவு குறைக்கவும், விவசாயிகளுக்குக் கரும்பு மற்றும் தானியங்கள் மூலம் கூடுதல் வருமானம் கிடைக்கச் செய்யவும் இந்தத் திட்டம் வழிவகுக்கும். மேலும், எத்தனால் பயன்பாடு அதிகரிப்பதால் வாகனங்களில் இருந்து வெளியேறும் கார்பன் அளவு குறைந்து, சுற்றுச்சூழல் மாசுபடுவது தடுக்கப்படும். இருப்பினும், தற்போதைய வாகனங்கள் E85 எரிபொருளுக்குப் பொருந்தாது என்பதால், ‘பிளெக்ஸ் ஃபுயல்’ (Flex-Fuel) வாகனங்களின் தேவை இனி வரும் காலங்களில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.