செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள பாதாள சாக்கடை திட்டத்தில் ஏற்பட்ட கோளாறுகள் பொதுமக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கோவளம் சாலையில் பாதாள சாக்கடை அடைப்பு காரணமாக கழிவுநீர் வெளியேறி சாலையோரம் தேங்கி நிற்கிறது. கடந்த ஒரு மாதமாக இந்த நிலை தொடர்வதால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது.
சாலையின் இருபுறங்களிலும் தேங்கியுள்ள கழிவுநீர் காரணமாக கொசுக்கள் பெருகி, வீடுகளுக்குள் புகுந்து மக்களின் நிம்மதியை குலைக்கின்றன. இதனால், பொதுமக்கள் இரவு நேரங்களில் தூங்க முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். மேலும், இந்த சாலையில் அதிக வாகன போக்குவரத்து இருப்பதால், நடந்து செல்லும் மக்கள் மற்றும் அருகிலுள்ள கடைகள், வீடுகள், கோயில்கள் ஆகியவற்றின் மீது கழிவுநீர் பீசப்படும் நிலை உள்ளது.
இந்த பிரச்சினையை குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த மாமல்லபுரத்தில் இத்தகைய நிலை நிலவுவது கவலைக்கிடமாக உள்ளது.
எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, பாதாள சாக்கடை அடைப்புகளை சரிசெய்து நிரந்தர தீர்வு வழங்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.





