இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபரீதம்: திமுக நிர்வாகி உயிரிழப்பு!

0
2

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இளம் திமுக நிர்வாகி, எதிர்பாராதவிதமாகச் சாலை ஓரத்தில் உள்ள கால்வாயில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த இளைஞருக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை இருப்பது கூடுதல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிக்குட்பட்ட 18-ஆவது வார்டு, செங்கேணியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஆகாஷ் (25). இவர் திமுகவில் இளைஞரணி துணை அமைப்பாளராகப் பொறுப்பு வகித்து வந்ததுடன், காயரம்பேட்டில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் தற்காலிகப் பணியாளராகவும் பணியாற்றி வந்தார். நேற்று இரவு வழக்கம் போலத் தனது வேலைகளை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் கூடுவாஞ்சேரி-நெல்லிக்குப்பம் சாலை வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

கோவிந்தராஜபுரம் அருகே வந்தபோது, ஆகாஷிற்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் நிலைதடுமாறிய அவர், இருசக்கர வாகனத்துடன் சாலை ஓரத்தில் இருந்த கழிவுநீர் கால்வாயில் விழுந்தார். இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், ஆகாஷ் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கூடுவாஞ்சேரி போலீசார், ஆகாஷின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த ஆகாஷிற்கு பவித்ரா (20) என்ற மனைவியும், ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இளம் வயதிலேயே மக்கள் பணியில் ஆர்வமாக இருந்த திமுக நிர்வாகியின் மறைவு அவரது குடும்பத்தினர் மற்றும் கட்சியினர் இடையே மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.