அமெரிக்காவின் குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கத்துறையான ‘ஐஸ்’ (ICE – Immigration and Customs Enforcement) அமைப்பின் பெயரை ‘நைஸ்’ (NICE) என மாற்றும் சுவாரசியமான யோசனைக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த ஆலோசனையை வழிமொழிந்துள்ள அவர், இதைச் செயல்படுத்துமாறு அதிகாரிகளுக்குப் பரிந்துரைத்துள்ளார்.
அமெரிக்காவில் சட்டவிரோதக் குடியேற்றங்களைத் தடுப்பதில் தீவிரமாகச் செயல்படும் ‘ICE’ அமைப்பு, ஊடகங்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகளால் பெரும்பாலும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படுவது வழக்கம். இந்நிலையில், சமூக வலைதளவாசி ஒருவர், “ICE என்ற பெயருக்கு முன்னால் ‘National’ என்ற வார்த்தையைச் சேர்த்தால் அது ‘NICE’ (National Immigration and Customs Enforcement) என்று மாறும். அப்படி மாறினால், ஊடகங்கள் வேறு வழியின்றி தினமும் எங்களை ‘NICE’ (அதாவது ‘நல்ல’ அதிகாரிகள்) என்று அழைக்க வேண்டியிருக்கும்” என நகைச்சுவையாகவும் தந்திரமாகவும் பதிவிட்டிருந்தார்.
இந்தப் பதிவைக் கண்ட அதிபர் டிரம்ப், உடனடியாக அதனைத் தனது பக்கத்தில் பகிர்ந்து, “மிகவும் சிறப்பான ஐடியா. இதைச் செய்யுங்கள்!” (Great idea. Let’s do it!) எனப் பதிவிட்டுள்ளார். பெயரில் நேர்மறையான மாற்றத்தைக் கொண்டு வருவதன் மூலம், துறையின் மீதான பொதுமக்களின் பார்வையை மாற்ற முடியும் என டிரம்ப் நம்புவதாகத் தெரிகிறது. ஒருவேளை இந்தப் பெயர் மாற்றம் நடைமுறைக்கு வந்தால், அமெரிக்க வரலாற்றில் ஒரு பாதுகாப்பு அமைப்பின் பெயர் இத்தகைய ‘விளம்பர’ நோக்கத்திற்காக மாற்றப்படுவது இதுவே முதல்முறையாக இருக்கும்.





