“எம்.ஜி.ஆர் போட்ட சாபம் தான் காரணம்”: 85 வயதிலும் மாறாத இளமையின் ரகசியத்தை உடைத்த சிவகுமார்!

0
2

தமிழ் சினிமாவின் ‘மார்க்கண்டேயன்’ என்று அழைக்கப்படும் பழம்பெரும் நடிகர் சிவகுமார், தனது 85 வயதிலும் இளமையாக இருப்பதற்கான சுவாரசியமான பின்னணியை மேடை ஒன்றில் கலகலப்பாகப் பகிர்ந்துள்ளார். பத்மஸ்ரீ அவ்வை சண்முகத்தின் 114-வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற அவர், மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் தமக்கு இட்ட ‘இளமைச் சாபம்’ தான் இன்றும் தமக்குத் துணையாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

1979-ஆம் ஆண்டு சிவகுமாரின் 100-வது படமான ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. அந்த விழாவில் பங்கேற்ற எம்.ஜி.ஆர், “முருகன் என்றால் அழகு மற்றும் இளமை என்று பொருள். இந்தச் சிவகுமார் அவர் வாழும் காலம் வரை அந்த முருகனைப் போலவே இளமையாக இருப்பார்” என வாழ்த்திக் கூறியுள்ளார். இதை நினைவுகூர்ந்த சிவகுமார், “அன்று அவர் கொடுத்த அந்தச் சாபம் தான் (வாழ்த்து) இன்று 85 வயதிலும் என்னை இளமையாக வைத்திருக்கிறது; கண்ணாடியில் பார்த்தால் எனக்கே கிழவன் போலத் தெரிந்தாலும், மக்கள் இன்னும் அப்படியே பார்க்கிறார்கள்” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

தனது திரைப்பயணத்தின் ஆரம்பகால சவால்கள் குறித்தும் அவர் பேசுகையில், ‘கந்தன் கருணை’ படத்தில் முருகன் வேடத்திற்காகத் தம்மோடு சேர்த்து மொத்தம் 35 பேருக்குத் தேர்வு (Test) நடத்தப்பட்டதாகக் கூறினார். “விபூதி, ஆபரணங்கள், கிரீடம் மற்றும் கையில் வேல் ஏந்தி ஆளுயரக் கண்ணாடியில் என்னைப் பார்த்தபோது அச்சு அசல் முருகனைப் போலவே இருந்தேன். ஆனால், வசனம் பேசும்போது முகத்தில் ‘திமிர்’ தெரிவதாக இயக்குநர் ஏ.பி.நாகராஜன் சுட்டிக்காட்டினார். அதன் பிறகு சாந்தமாகப் பேசுவது எப்படி என்பதை அவர் சொல்லிக் கொடுத்தார்” எனத் தனது திரையுலகப் பாடங்களைச் சிவகுமார் நினைவுகூர்ந்தார். 60 ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் சிறந்த பேச்சாளராகவும், முன்மாதிரியாகவும் விளங்கும் சிவகுமாரின் இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.