செங்கல்பட்டு: EVM பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆய்வு

0
4

செங்கல்பட்டு மற்றும் திருப்போரூர் சட்டமன்றத் தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள மையத்தில் நடைபெற்று வரும் ஏற்பாடுகள் தொடர்பாக இன்று (ஏப்.24) அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-க்கான வாக்குபதிவு 23.04.2026 அன்று நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏழு சட்டமன்ற தொகுதிகளுக்கு 3 இடங்களில் வாக்கு எண்ணும் பணிகள் நடைபெறவுள்ளது. செங்கல்பட்டு, திருப்போரூர் சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையம், செங்கல்பட்டு, ஆத்தூர் சமூக மேம்பாட்டிற்கான ஒருங்கிணைந்த பயிற்சி மையத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்குகளின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது. தாம்பரம், பல்லாவரம் மற்றும் சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிகளுக்கான பதிவு செய்யப்பட்ட வாக்குகளின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குரோம்பேட்டை மெட்ராஸ் தொழில்நுட்பக் கழகத்தில் (MIT) பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், மதுராந்தகம், செய்யூர் சட்டமன்ற தொகுதிகளுக்கான பதிவு செய்யப்பட்ட வாக்குகளின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மதுராந்தகம், வில்வராயநல்லூர் சுபம் கல்வியியல் கல்லூரியில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது.

மேற்காணும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவிற்கு தடைசெய்யப்பட்ட பகுதியாக (Red Zone Area) 23.04.2026 முதல் 05.05.2026 வரை அறிவிக்கப்பட்டுள்ளதால், மேற்படி பகுதியில் தேர்தல் தொடர்பான அனைத்து பணிகளும் நிறைவடையும் வரை, ட்ரோன் (Drone) ஆளில்லா விமானங்கள் (Remotedly Piloted Aircraft System (RPAS)) பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், வாக்கு எண்ணும் மையங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் அமைக்கப்பட்டு 23.04.2026 முதல் வாக்கு எண்ணும், பணிகள் நிறைவடையும் வரை 24 மணி நேரமும் கண்காணிப்பு பணிகள் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், மூன்று வாக்கு எண்ணும் மையங்களிலும் தடையில்லா மின்சார வசதி செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.