தமிழகம் முழுவதும் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், ஜனநாயக கடமையை முன்னிலைப்படுத்திய புதுமணத் தம்பதிகள் பலர் மணக்கோலத்திலேயே வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களித்தது மக்களிடையே பெரும் வரவேற்பையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. திருமண நாளிலேயே வாக்குரிமையை பயன்படுத்திய இந்த சம்பவங்கள், ஜனநாயகத்தின் மீது மக்களின் விழிப்புணர்வை வெளிப்படுத்துகின்றன.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதியைச் சேர்ந்த பிரீத்தி–தனசேகர் தம்பதியர், திருமணம் முடிந்த உடனேயே மணமக்கள் அலங்காரத்திலேயே பொத்தேரி அருகே உள்ள காட்டூர் அரசு நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடிக்கு சென்று தங்கள் வாக்கை பதிவு செய்தனர். இதேபோல் தண்டலம் பகுதியில் சக்திவேல்–ஜெயலட்சுமி தம்பதியரும் மணக்கோலத்தில் வந்து வாக்களித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர்.
பல்லாவரம் தொகுதிக்குட்பட்ட பொழிச்சலூர் பகுதியைச் சேர்ந்த தினேஷ்குமார்–புவனேஸ்வரி தம்பதியரும் திருமணம் முடிந்தவுடன் நேரடியாக வாக்குச்சாவடிக்கு சென்று தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். இதேபோல் திருவள்ளூர், சேலம், காஞ்சிபுரம், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் புதுமணத் தம்பதிகள் வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களித்தனர்.
விழுப்புரம் மாவட்டம், மயிலம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஊரல் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். இவருக்கும் வள்ளி என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. இல்லற வாழ்க்கையில் இணைந்த இந்த புதுமணத்தம்பதி, தங்களது வாழ்வின் முக்கிய தருணத்திலும் ஜனநாயகக் கடமையை மறக்கவில்லை.
சிலர் காதலித்து திருமணம் செய்து கொண்ட உடனேயே வாக்களித்ததும், சிலர் திருமண நிகழ்ச்சிகளுக்கிடையே நேரம் ஒதுக்கி வாக்குரிமையை பயன்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது. இத்தகைய செயல்கள், தேர்தல் நாளில் வாக்களிப்பது எவ்வளவு முக்கியம் என்பதற்கான எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது.
பொதுமக்கள் மற்றும் தேர்தல் அதிகாரிகள், இந்த தம்பதிகளின் பொறுப்புணர்வையும் ஜனநாயக நம்பிக்கையையும் பாராட்டியுள்ளனர். “மணநாளிலேயே வாக்களித்தது பெருமை” என பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.





