தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைய உள்ள நிலையில், செங்கல்பட்டு தொகுதியில் அதிமுகவினர் வாக்காளர்களுக்குப் போலி காசோலைகளை வழங்கி வருவதாக எழுந்துள்ள புகார் தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாகச் செங்கல்பட்டு தொகுதி திமுக வேட்பாளர் எம்.கே.டி. கார்த்திக் தண்டபாணி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளார்.
செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதியின் அதிமுக வேட்பாளர் கஜேந்திரனுக்கு வாக்களித்தால், தலா 10,000 ரூபாய் பணத்தைக் காசோலை மூலம் பெற்றுக்கொள்ளலாமெனக் கூறி அதிமுகவினர் பல்வேறு இடங்களில் காசோலைகளை விநியோகித்து வருவதாகத் திமுக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வாக்காளர்களைத் திசைதிருப்பும் நோக்கில் இந்தச் சட்டவிரோத நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் விதிகளுக்குப் புறம்பாக, வாக்காளர்களை விலைக்கு வாங்கும் முயற்சியில் அதிமுகவினர் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்கள் விநியோகிக்கும் போலி காசோலைகளை உடனடியாகக் கைப்பற்ற வேண்டும் என்றும் கோரி திமுக வேட்பாளர் கார்த்திக் தண்டபாணி தனது வழக்கறிஞர்களுடன் சென்று செங்கல்பட்டு தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.
புகார் அளித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய திமுக வழக்கறிஞர் கனகராஜ், “வாக்காளர்களுக்குக் காசோலை வழங்குவது சட்டவிரோதம். போலி காசோலைகளைக் கொடுத்து மக்களை அதிமுகவினர் ஏமாற்றி வருகின்றனர். இது தொடர்பாகத் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளோம். புகாரைப் பெற்றுக்கொண்ட அதிகாரிகள், உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளனர்,” என்று தெரிவித்தார்.
தேர்தல் பரப்புரை முடியும் கடைசி நேரத்தில் செங்கல்பட்டில் எழுந்துள்ள இந்த ‘காசோலை விவகாரம்’ அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.





