ஆயுர்வேத மருத்துவத்தில் ‘மூலிகைகளின் அரசன்’ என்று போற்றப்படும் அஸ்வகந்தாவின் பயன்பாடு குறித்து மத்திய அரசு ஒரு முக்கியக் கட்டுப்பாட்டை விதித்துள்ளது. உணவுப் பொருட்கள் மற்றும் சுகாதார துணைப் பொருட்களில் (Supplements) அஸ்வகந்தாவின் இலைகளைப் பயன்படுத்துவதற்கு இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) முழுமையான தடை விதித்துள்ளது.
அஸ்வகந்தாவின் வேர்கள் மருத்துவக் குணங்கள் கொண்டவை என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், அதன் இலைகளைப் பயன்படுத்துவது ஆபத்தானது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அஸ்வகந்தா இலைகளில் ‘விதாபெரின்-ஏ’ என்ற வேதிப்பொருள் வேர்களை விட மிக அதிக அளவில் உள்ளது. இது அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டி உடலில் சேரும்போது, கல்லீரலைப் (Liver) கடுமையாகப் பாதிக்கும் என்று ஐஸ்லாந்து, ஜெர்மனி மற்றும் இந்தியாவில் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.
அஸ்வகந்தா வேர்களுடன் ஒப்பிடும்போது இலைகள் மிகக் குறைந்த விலையில் கிடைக்கின்றன. இதனால் சில நிறுவனங்கள் லாப நோக்கத்திற்காக வேர்களுக்குப் பதில் இலைகளைச் சேர்த்து விற்பனை செய்வதை அரசு கண்டறிந்துள்ளது.
ஆயுர்வேத நூல்கள் மற்றும் ஆயுஷ் அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களின்படி, அஸ்வகந்தா வேர்கள் மட்டுமே உட்கொள்வதற்குப் பரிந்துரைக்கப்படுகின்றன. இலைகள் வெளிப்புறப் பயன்பாட்டிற்கு (External application) மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். இந்தத் தடையைத் தொடர்ந்து FSSAI அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.
அஸ்வகந்தா இலைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட அனைத்துப் பொருட்களையும் சந்தையிலிருந்து உடனடியாகத் திரும்பப் பெற உற்பத்தியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விதியை மீறி இலைகளைப் பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் 2006-இன் கீழ் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
அஸ்வகந்தா வேர்கள் மற்றும் அவற்றின் சாறு ஆகியவற்றைத் தொடர்ந்து பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நீங்கள் அஸ்வகந்தா தொடர்பான ஹெல்த் சப்ளிமெண்ட்ஸ் அல்லது பொடிகளை வாங்கும்போது, அதன் உறையில் (Label) “அஸ்வகந்தா வேர் சாறு” (Ashwagandha Root Extract) என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்கவும். வெறும் “அஸ்வகந்தா சாறு” என்று மட்டும் இருந்தால், அதில் தடை செய்யப்பட்ட இலைகளின் கலப்பு இருக்க வாய்ப்புள்ளது.





