ஹார்முஸ் நீரிணை மீண்டும் மூடல்.. இந்தியக் கப்பல் மீது துப்பாக்கிச் சூடு!

0
9

வளைகுடா பிராந்தியத்தில் போர் மேகங்கள் மீண்டும் சூழத் தொடங்கியுள்ளன. உலக நாடுகளின் எரிசக்தி தேவையில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் ராணுவம் மீண்டும் மூடியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கையின் போது, அப்பகுதியைக் கடக்க முயன்ற இந்திய ஆயில் டேங்கர் கப்பல்கள் மீது ஈரான் கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. ஓமனுக்கு வடகிழக்கே சுமார் 37 கி.மீ தொலைவில் ஹார்முஸ் ஜலசந்தியைக் கடக்க முயன்ற கப்பல்களை நோக்கி ஈரான் கடற்படை எச்சரிக்கை விடுத்தது.

ஹார்முஸ் பகுதியைக் கடக்க முயன்ற இரண்டு இந்திய ஆயில் டேங்கர் கப்பல்கள் மீது ஈரான் கடற்படை திடீரெனத் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதனால் அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. நல்வாய்ப்பாக, இந்தக் தாக்குதலில் கப்பல்களுக்கோ அல்லது ஊழியர்களுக்கோ எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. தாக்குதலைத் தொடர்ந்து இந்தியக் கப்பல்கள் பாதுகாப்பாகப் பின்வாங்கின.

வழக்கமாக இந்தியக் கப்பல்களுக்கு எந்தத் தடையும் விதிக்காத நிலையில், இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதை இந்திய அரசு தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது. இது குறித்து இந்திய அதிகாரிகள் ஈரானுடன் அவசரப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

சமீபத்தில் இஸ்ரேல் – லெபனான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஹார்முஸ் ஜலசந்தியைத் திறப்பதாக ஈரான் அறிவித்திருந்தது. இதற்குப் பதிலாக, ஈரான் துறைமுகங்கள் மீதான முற்றுகையை விலக்கிக் கொள்வதாக அமெரிக்கா வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது முடிவை மாற்றிக்கொண்டார். “அணுசக்தி ஒப்பந்தம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்களில் இறுதி முடிவு எட்டப்படும் வரை, ஈரான் துறைமுகங்கள் மீதான அமெரிக்கக் கடற்படையின் முற்றுகை தொடரும்” என அவர் அறிவித்தார்.

அமெரிக்காவின் இந்த அறிவிப்பு ஒப்பந்த விதிமீறல் என்று சாடிய ஈரான், “அமெரிக்கா வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிவிட்டது. இனி எந்த நாட்டு கப்பலும் ஹார்முஸ் ஜலசந்தியைக் கடக்க அனுமதியில்லை” என ரேடியோ மூலம் எச்சரித்து, ஜலசந்தியை முழுமையாக மூடியுள்ளது. உலகில் விநியோகிக்கப்படும் கச்சா எண்ணெய்யில் சுமார் 20% இந்த ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது.

இந்த ஜலசந்தி மூடப்பட்டுள்ளதால், சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தியக் கடற்படை இந்தப் பகுதியில் தனது கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது.
ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இந்த மோதல், மூன்றாம் உலகப் போருக்கான அச்சத்தை மீண்டும் கிளப்பியுள்ளது. குறிப்பாக இந்தியப் பெருங்கடல் பகுதியில் கப்பல் போக்குவரத்துப் பெரும் பாதிப்புக்குள்ளாகும்.