தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், தனது வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்துள்ளதாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இரண்டு வெவ்வேறு தொகுதிகளில் அவர் தாக்கல் செய்த சொத்து மதிப்பில் பெரும் வித்தியாசம் இருப்பதாக எழுந்துள்ள இந்தப் புகார், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தவெக தலைவர் விஜய், நடப்புத் தேர்தலில் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இந்த இரு தொகுதிகளிலும் அவர் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரங்களில் (Affidavits) குறிப்பிட்டுள்ள சொத்து விவரங்கள் முன்னுக்குப்பின் முரணாக இருப்பதாக மனுதாரர் குற்றம் சாட்டியுள்ளார்.
வியாசர்பாடியைச் சேர்ந்த பெரம்பூர் தொகுதி வாக்காளர் விக்னேஷ் தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ள முக்கிய அம்சங்களாவது, தனது சொத்து மதிப்பு ரூ. 115 கோடியே 13 லட்சத்து 63 ஆயிரம் எனக் குறிப்பிட்டுள்ளார். அதே சமயம், திருச்சி கிழக்கு தொகுதிக்கான மனுவில் சொத்து மதிப்பு ரூ. 220 கோடியே 15 லட்சத்து 62 ஆயிரம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஒரே வேட்பாளர், இரு வேறு தொகுதிகளில் தாக்கல் செய்த மனுக்களில் சொத்து மதிப்பில் சுமார் 100 கோடி ரூபாய்க்கும் மேல் வித்தியாசம் இருப்பது உண்மைத் தகவலை மறைப்பதற்குச் சமம் என மனுவில் கூறப்பட்டுள்ளது.
விஜய் தாக்கல் செய்துள்ள இந்தச் சொத்து விவரங்கள் முழுமையானவையா அல்லது உண்மையானவையா என்பது குறித்து வருமான வரித்துறை மற்றும் தேர்தல் ஆணையம் விரிவான விசாரணை நடத்த வேண்டும் என மனுதாரர் கோரியுள்ளார். மேலும், இந்த விசாரணை அறிக்கையைத் தேர்தலுக்கு முன்பே பொதுமக்களுக்கு வெளியிடுமாறு சென்னை மற்றும் திருச்சி மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தேர்தல் விதிகளின்படி, வேட்புமனுவில் தவறான அல்லது முரணான தகவல்களை அளிப்பது குற்றமாகும். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், நீதிமன்றத்தின் தீர்ப்பு விஜய்யின் வேட்புமனு ஏற்பு அல்லது நிராகரிப்பில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது. முதன்முறையாகத் தேர்தல் களத்தைக் காணும் விஜய்க்கு, இந்தப் புகார் ஒரு தர்மசங்கடமான சூழலை உருவாக்கியுள்ளது.





