தனிமை மற்றும் மன உளைச்சலால் பாதிக்கப்பட்ட இளம்பெண், தாயின் நினைவு நாளில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த செல்வத்தின் மகள் நதியா (27), கடந்த நான்கு ஆண்டுகளாக மறைமலைநகர் காந்தி நகரில் வாடகை வீட்டில் தங்கி, ஒரகடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அவருடன் வசித்து வந்த தோழி, சொந்த ஊரில் நடைபெற்ற திருவிழாவிற்காக சென்றிருந்ததால், நதியா சில நாட்களாக தனியாக இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், மன உளைச்சலில் இருந்த நதியா, தனது அறையில் துப்பட்டாவால் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தோழி பலமுறை அழைத்தும் பதில் இல்லை என்பதால், வீட்டு உரிமையாளரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, நதியா தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்தது கண்டறியப்பட்டது.
சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், “என் தாய் இறந்த நாளிலேயே நானும் இறக்கிறேன்” என்று அவர் உருக்கமாக எழுதிய கடிதம் ஒன்றை போலீசார் மீட்டுள்ளதாக கூறப்படுகிறது.





