சொன்னதை செய்த ட்ரம்ப்: நேட்டோ அமைப்பிலிருந்து படைகளைத் திரும்பப் பெற்ற அமெரிக்கா!

0
4

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தனது தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான “நேட்டோ அமைப்பிலிருந்து படைகளைத் திரும்பப் பெறுதல்” என்பதைச் செயல்படுத்தத் தொடங்கியுள்ளார். இது ஐரோப்பிய நாடுகளிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அதிபர் ட்ரம்ப் பொறுப்பேற்றது முதல், நேட்டோ (NATO) அமைப்பிற்கு அமெரிக்காவே அதிக நிதிப் பங்களிப்பு செய்வதாகக் குற்றம் சாட்டி வந்தார். நேட்டோ நாடுகள் தங்கள் பாதுகாப்பு நிதியை அதிகரிக்க வேண்டும் என அவர் விடுத்த நெருக்கடியால் பல நாடுகள் ராணுவ நிதியை உயர்த்தின.

டென்மார்க்கிற்குச் சொந்தமான கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்கப் போவதாக ட்ரம்ப் அறிவித்தது ஐரோப்பிய நாடுகளின் கடும் கண்டனத்திற்குள்ளானது.

ஈரான் உடனான போரில் நேட்டோ நாடுகள் அமெரிக்காவிற்கு ஆதரவாக வர மறுத்ததோடு, ஸ்பெயின் போன்ற நாடுகள் அமெரிக்க விமானங்கள் தரையிறங்கவும் அனுமதி மறுத்தன. இதனால் அதிருப்தி அடைந்த ட்ரம்ப், நேட்டோவால் அமெரிக்காவிற்கு எந்தப் பயனும் இல்லையென அறிவித்தார்.

தற்போது முதற்கட்டமாக ஜெர்மனியிலிருந்து சுமார் 5 ஆயிரம் அமெரிக்க வீரர்களைத் திரும்பப் பெற அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இந்தப் படைகளில் உள்ள பாதி வீரர்கள் அமெரிக்காவிற்குத் திரும்புவர் என்றும், மீதமுள்ளவர்கள் பிற அமெரிக்கத் தளங்களுக்கு அனுப்பப்படுவர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்பெயின் உள்ளிட்ட பிற ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் தனது படைகளை அமெரிக்கா படிப்படியாகத் திரும்பப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய ஆண்டுகளில் ரஷ்யா ஐரோப்பிய நாடுகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது. இந்நிலையில், பாதுகாப்பு கவசமாக விளங்கிய அமெரிக்கப் படைகள் வெளியேறுவது ஐரோப்பிய நாடுகளை மிகுந்த அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. அதே வேளையில், ஐரோப்பாவில் அமெரிக்காவின் செல்வாக்கு குறைவது ரஷ்யாவிற்குப் பெரும் மகிழ்ச்சியை அளிக்கும் விதமாக அமைந்துள்ளது.

trump-withdraws-us-troops-nato-germany-russia-impact