மலையாள திரையுலகில் தனித்துவமான நடிப்பால் கவனம் ஈர்த்துள்ள ஜோஜூ ஜார்ஜ், மீண்டும் இயக்குநராக புதிய திரைப்படத்தை உருவாக்கத் தயாராகிறார். அவரது இயக்கத்தில் உருவாகவுள்ள இந்த புதிய படத்திற்கு ‘பரிபாடி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
‘ஜோசஃப்’, ‘இரட்டா’ போன்ற படங்களில் தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களையும் விமர்சகர்களையும் கவர்ந்த ஜோஜூ, தனது திறமையை இயக்குநராகவும் நிரூபித்துள்ளார். 2024ஆம் ஆண்டு வெளியான அவரது ‘பனி’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்று, ரூ.30 கோடிக்கும் மேல் வசூலித்தது குறிப்பிடத்தக்கது. அந்த படத்தின் வெற்றி, ஜோஜூவின் இயக்கத் திறனை மேலும் உறுதிப்படுத்தியது.
இந்நிலையில், ‘பரிபாடி’ படத்தின் மூலம் 100 புதுமுக நடிகர்களை அறிமுகப்படுத்தும் முயற்சியில் ஜோஜூ ஈடுபட்டுள்ளார். இப்படம் புதிய முகங்களுக்கு வாய்ப்பளிக்கும் ஒரு முக்கிய முயற்சியாக பார்க்கப்படுகிறது. கதாபாத்திரத் தேர்வுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன என்றும், முன் தயாரிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் படத்திற்கு பிரபல ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவி ஒளிப்பதிவு செய்ய உள்ளார். காட்சியமைப்பில் தனித்துவம் கொண்ட ராஜீவ் ரவியின் பங்களிப்பு, படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.
மேலும், படப்பிடிப்பு கேரளா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. ‘2018’, ‘ரேகா சித்திரம்’, ‘ஆடு 3’ போன்ற படங்களை தயாரித்த காவ்யா பிலிம் கம்பெனி இந்த படத்தையும் பெரிய பொருள்செலவில் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது.
புதிய கதைக்களம், பல புதுமுகங்கள் மற்றும் திறமையான தொழில்நுட்பக் குழுவுடன் உருவாகும் ‘பரிபாடி’ திரைப்படம், மலையாள சினிமாவில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
