போதைப்பொருள் சப்ளையில் ஈடுபட்டதாக திரைப்பட தயாரிப்பாளர் கைது செய்யப்பட்ட நிலையில், பல முன்னணி நடிகர், நடிகைகளும் சிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
போதைப்பொருள் விற்பனை சப்ளையில் ஈடுபட்டதாக திரைப்பட இணை தயாரிப்பாளர் சர்புதீன், முகப்பேரைச் சேர்ந்த சீனிவாசன், வளசரவாக்கத்தைச் சேர்ந்த சரத் ஆகியோரை போலீசார் கடந்த 20ஆம் தேதி கைது செய்தனர்.
சர்புதீனின் காரில் இருந்து 27.91 லட்சம் ரூபாயும், சீனிவாசன் வீட்டில் 10 கிராம் ஓ.ஜி. கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து திருமங்கலம் போலீசார் 3 பேரையும் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் சர்புதீன், தொழிலதிபர் சரத் ஆகியோரை திருமங்கலம் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.
சர்புதீன் நடிகர் சிம்புவிற்கு மேலாளராக பணியாற்றி உள்ளார். பல நடிகர்கள், நடிகைகளுடன் பழக்கமுடையர். இதனால், அவர் யாருக்கெல்லாம் போதைப்பொருள் சப்ளை செய்தார் என போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் எந்தெந்த சினிமா விருந்துகளில் போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டது? அதில் கலந்து கொண்ட திரை உலகினர் யார் யார் என்பது தொடர்பாகவும் சர்புதீனிடம் விசாரணை நடத்தி பட்டியலை தயாரித்தனர். இதையடுத்து, சர்புதீன் கொடுத்த தகவலின் பேரில் திரைப்பட தயாரிப்பாளர் தினேஷ் ராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதை தொடர்ந்து, பல முன்னணி நடிகர், நடிகைகளும், துணை நடிகைகள் சிலரும் இந்த வழக்கில் சிக்குவார்கள் என்று கூறப்படுகிறது.








