சிக்னல் கோளாறு காரணமாக, மறைமலைநகர் பகுதியில் ஒரே தண்டவாளத்தில் இரண்டு மின்சார ரயில்கள் வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
செங்கல்பட்டு நகரை சென்னை உள்பகுதியில் இணைக்கக்கூடிய முக்கிய பொது போக்குவரத்தில் ஒன்றாக, மின்சார ரயில்கள் உள்ளன. நாள்தோறும் செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் வழியாக சென்னை கடற்கரைக்கு 30க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் இன்று ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரயில்கள் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் – சிங்கபெருமாள்கோவில் இடையே இடைப்பட்ட பகுதியில் ஒரே தண்டவாளத்தில் அடுத்தடுத்த நான்கு மின்சார ரயில்கள் ஒன்றன் பின் ஒன்றாக நிறுத்தப்பட்டதால் ரயிலில் இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பல மாவட்டங்களில் மழை பெய்து வருகின்றது. இந்தநிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் லேசான சாரல் மழை பெய்தது. இதன் எதிரொலியாக சிங்கபெருமாள்கோவில் – மறைமலைநகர் இடையே திடீரென சிக்னல் கோளாறு ஏற்பட்டது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மின்சார ரயில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது.
மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு சிக்னல் கோளாறு சரி செய்த பிறகே, ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். செங்கல்பட்டு – தாம்பரம் இடையே மூன்று ரயில் பாதைகள் இருப்பதால் சிக்னல் கோளாறு காரணமாக விரைவு ரயில் தாமதமாக செல்லக்கூடாது என்பதற்காகவே மின்சார ரயில்கள் தாம்பரம் – செங்கல்பட்டு மார்க்கமாக ஒரே தண்டவாளத்தில் அடுத்தடுத்த நிறுத்தப்பட்டிருந்ததாக கூறினர். இதுகுறித்து தற்பொழுது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், ரயில் வேகமாக செல்லும் பொழுது இது போன்ற சிக்னல் கோளாறு ஏற்படவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.








