உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் 11 வயது சிறுமி ஒருவர் தனியாக 3 கிலோமீட்டர் நடைபயணம் மேற்கொண்டு மரம் நடும் விழிப்புணர்வை ஏற்படுத்தியதுடன், தமிழக முதல்வர் விஜயிடம் விடுத்த உருக்கமான கோரிக்கை சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள திருக்கச்சூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் – கவிதா தம்பதியரின் மகள் சாமினி (11), அப்பகுதியில் உள்ள பள்ளியில் பயின்று வருகிறார். சிறுவயதிலிருந்தே இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஆர்வம் கொண்ட அவர், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தனித்துவமான விழிப்புணர்வு முயற்சியை மேற்கொண்டார்.
“மரம் வளர்ப்போம், மழை பெறுவோம்” உள்ளிட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி சுமார் 3 கிலோமீட்டர் தூரம் நடைபயணம் மேற்கொண்டு பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பின்னர் ஒரு மரக்கன்றை நட்டு அதற்கு தண்ணீர் ஊற்றி தனது பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.
இதனைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் விஜய்க்கு அவர் விடுத்த கோரிக்கை பலரையும் நெகிழச் செய்துள்ளது. “விஜய் மாமா, நான் இன்று மரம் நட்டுவிட்டேன். நீங்க மக்களிடம் மரம் நட சொல்லணும். பிறந்தநாள், வீட்டு விசேஷம், பொதுநிகழ்ச்சி எதுவாக இருந்தாலும் ஒரு மரம் நட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளுங்கள். நீங்க சொன்னா தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் கண்டிப்பாக கேட்பாங்க” என்று மழலை மாறாத குரலில் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து சிறுவயதிலேயே விழிப்புணர்வு ஏற்படுத்திய சாமினியின் செயலும், அவரது உருக்கமான கோரிக்கையும் பொதுமக்கள் மற்றும் சமூக வலைதள பயனர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று பாராட்டுகளை குவித்து வருகிறது.





