பள்ளிக்கரணை குப்பைக்கிடங்கில் பயங்கர தீ; 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிந்து நாசம்

0
3

சென்னை தாம்பரம் – வேளச்சேரி பிரதான சாலையில் உள்ள பள்ளிக்கரணை குப்பைக்கிடங்கு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 100-க்கும் மேற்பட்ட பழைய மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் எரிந்து சேதமடைந்தன. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பள்ளிக்கரணை குப்பைக்கிடங்கு வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பழைய வாகனங்கள் மற்றும் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கின. தீ வேகமாக பரவியதால் அங்கு நிறுத்தப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரையாகின.

தீ விபத்தால் அடர்ந்த கரும்புகை வானத்தை சூழ்ந்தது. இதனால் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் மக்கள் அச்சமடைந்தனர். மேலும் தாம்பரம் – வேளச்சேரி சாலையில் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் பல வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டதால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இந்த தீ விபத்தில் மனித உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் வாகனங்கள் பெருமளவில் எரிந்து சேதமடைந்ததால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்கசிவு அல்லது பிற காரணங்களால் தீ ஏற்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது