ஆதிதிராவிடர், பழங்குடியின பட்டதாரிகளுக்கு CAD, CAM பயிற்சி

0
3

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (TAHDCO) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி இளைஞர்களுக்கு தொழில்துறை சார்ந்த மேம்பட்ட திறன் பயிற்சிகளை வழங்க உள்ளதாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தின் கீழ் Computer-Aided Design (CAD), Computer-Aided Manufacturing (CAM) மற்றும் Industrial Automation உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. தொழிற்துறை தேவைகளுக்கு ஏற்ப இளைஞர்களின் திறனை மேம்படுத்தி, தரமான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

இந்த பயிற்சியில் சேர விரும்புவோர் ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். மேலும், பி.இ. மெக்கானிக்கல் இன்ஜினியரிங், மின் மற்றும் மின்னணுவியல் இன்ஜினியரிங் (EEE) போன்ற பொறியியல் படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களின் வயது 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும் என தகுதி நிபந்தனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

90 நாட்கள் கால அளவிலான இந்த பயிற்சி பெரம்பலூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் நடைபெற உள்ளது. பயிற்சியில் பங்கேற்கும் தகுதியான பயனாளர்களின் தங்குமிடம் மற்றும் தொடர்புடைய செலவுகள் அனைத்தும் தாட்கோ மூலம் ஏற்கப்படும்.

பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும் இளைஞர்களுக்கு, பயிற்சி வழங்கும் நிறுவனத்தின் மூலமாகவே வேலைவாய்ப்பு ஏற்பாடு செய்யப்படும். ஆரம்ப கட்ட மாத ஊதியமாக ரூ.25,000 முதல் ரூ.40,000 வரை பெறும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருப்பமுள்ள தகுதியான இளைஞர்கள் தாட்கோவின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tahdco.com மூலம் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தியுள்ளார்.