பரமன்கேணியில் புதிய நான்கு வழி பாலம்: 3 மாதங்களில் திறப்பு!

0
2

மாமல்லபுரம் அருகே பரமன்கேணி பகுதியில் பகிங்ஹாம் கால்வாய் மீது அமைக்கப்பட்டுள்ள புதிய நான்கு வழி பாலப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. மேலும், இந்த புதிய பாலம் இன்னும் 3 மாதங்களில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை – புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலை (ECR) பகுதியை தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் பராமரித்து வந்த நிலையில், மாமல்லபுரம் முதல் புதுச்சேரி வரையிலான பகுதி கடந்த 2018ஆம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டது. அதன் பின்னர் இருவழிச் சாலையாக இருந்த இந்த பாதை மையத் தடுப்புகளுடன் நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.

கூவத்தூர் அருகே பரமன்கேணி பகுதியில் இருந்த பழைய பாலம் குறுகிய அகலத்துடன் மற்றும் அபாயகரமான வளைவுகளுடன் இருந்ததால் அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் புதிய பாலம் அமைக்கும் பணியை தொடங்கியது.

தற்போது புதிய பாலத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. புதிய பாலம் திறக்கப்பட்ட பிறகு போக்குவரத்து நெரிசல் குறைவதுடன், விபத்துகளும் கணிசமாக குறையும் என பொதுமக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.