ரோந்து வாகனம் மீது அரசு பேருந்து மோதி விபத்து – 2 காவலர்கள் பலத்த காயம்!

0
2

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் ரோந்து வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில், இரண்டு காவலர்கள் பலத்த காயமடைந்தனர். பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் நிகழ்ந்த இந்த விபத்தில் காவல் வாகனம் உருக்குலைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் படாளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அத்திமனம் பகுதியில் இன்று அதிகாலை தேசிய நெடுஞ்சாலை ரோந்து வாகனம் (Highway Patrol) வழக்கமான கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது கள்ளக்குறிச்சியிலிருந்து சென்னை கிளம்பாக்கம் நோக்கி அதிவேகமாக வந்த அரசு பேருந்து, எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் நின்று கொண்டிருந்த ரோந்து வாகனத்தின் பின்புறத்தில் பலமாக மோதியது.

பேருந்து மோதிய வேகத்தில் காவல் ரோந்து வாகனம் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் வாகனத்திற்குள் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் குணசேகரன் மற்றும் ஓட்டுநரான காவலர் விஜயராஜ் ஆகிய இருவரும் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். அவர்களுக்குத் தலை மற்றும் உடல் பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.

விபத்து குறித்துத் தகவல் கிடைத்ததும் படாளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காயமடைந்த இரண்டு காவலர்களையும் மீட்டு சிகிச்சைக்காகச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து தொடர்பாகப் பேருந்து ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், அதிகாலை நேரத்தில் ஓட்டுநர் தூக்கக் கலக்கத்தில் இருந்தாரா அல்லது பேருந்தின் இயந்திரக் கோளாறு காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.