மேற்காசியப் போர்ச் சூழல் காரணமாக நிலவும் உலகளாவிய எரிபொருள் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, இந்திய உச்ச நீதிமன்றம் தனது செயல்பாடுகளில் அதிரடி மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில், இனி வாரத்தின் இரண்டு நாட்கள் முழுமையாக ‘வீடியோ கான்பரன்சிங்’ (VC) மூலம் மட்டுமே வழக்குகள் விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் புதிய சுற்றறிக்கையின்படி, இனி வரும் வாரங்களில் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் (Miscellaneous Days) அனைத்து வழக்குகளும் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக மட்டுமே விசாரிக்கப்படும். வழக்கறிஞர்கள் மற்றும் மனுதாரர்கள் நீதிமன்றத்திற்கு நேரில் வர வேண்டிய அவசியமில்லை. செவ்வாய் முதல் வியாழன் வரையிலான நாட்களில் வழக்கமான ‘ஹைப்ரிட்’ (நேரடி மற்றும் ஆன்லைன்) முறை தொடரும்.
நீதிமன்றப் பணியாளர்களின் பயணத்தைக் குறைக்கும் விதமாக, உச்ச நீதிமன்றப் பதிவக (Registry) ஊழியர்களில் 50 சதவீதம் பேர் வாரத்தில் இரண்டு நாட்கள் சுழற்சி முறையில் (Rotational basis) வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக வாராந்திரப் பணிப் பட்டியல் (Roster) தயாரிக்கப்பட்டு, நீதிமன்றப் பணிகள் பாதிக்காத வகையில் இது அமல்படுத்தப்படும்.
எரிபொருளைச் சேமிப்பதில் முன்மாதிரியாகத் திகழும் வகையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்களுக்குள் ‘கார் பூலிங்’ (ஒரே வாகனத்தைப் பகிர்ந்து கொள்ளுதல்) முறையைப் பின்பற்ற ஒருமனதாக முடிவு செய்துள்ளனர். இது உயர் மட்ட அரசு அதிகாரிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
மேற்காசியப் பதற்றம் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக, எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு விடுத்த வேண்டுகோளை ஏற்று, உச்ச நீதிமன்றம் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்ந்துள்ள நிலையில், நீதிமன்றத்தின் இந்த ‘டிஜிட்டல்’ மாற்றம் மற்ற அரசு நிறுவனங்களுக்கும் வழிகாட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.




