நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாகவும், பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில், சித்திரை மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு இன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சங்கொலி முழங்க, பக்தி பரவசத்துடன் நந்தியம்பெருமானை வழிபட்டனர்.
அண்ணாமலையார் திருக்கோவிலின் ஐந்தாம் பிரகாரத்தில், ஆயிரங்கால் மண்டபம் அருகே அமைந்துள்ள பிரம்மாண்டமான பெரிய நந்தியம்பெருமானுக்குப் பிரதோஷத்தை முன்னிட்டுச் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. அரிசி மாவு, மஞ்சள் தூள், அபிஷேகத் தூள், பஞ்சாமிர்தம், தயிர், தேன், பன்னீர், இளநீர் மற்றும் சந்தனம் ஆகியவற்றால் நந்தி பகவானுக்கு நீராட்டப்பட்டது. குறிப்பாக, பல கிலோ விபூதி மற்றும் லிட்டர் கணக்கிலான பால் கொண்டு செய்யப்பட்ட அபிஷேகம் பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது.
அபிஷேகத்தைத் தொடர்ந்து, அருகம்புல், கனகாம்பரம், சாமந்தி மற்றும் மல்லி உள்ளிட்ட வண்ணமயமான மலர் மாலைகளால் நந்தியம்பெருமானுக்குச் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. இந்த வைபவத்தின் போது, பக்தர்கள் “அண்ணாமலையாருக்கு அரோகரா” என எழுப்பிய முழக்கமும், சங்கொலியும் விண்ணதிரச் செய்தன.
பிரதோஷ தினத்தில் நந்தியம்பெருமானை வழிபட்டால் நினைத்த காரியங்கள் கைக்கூடும் என்பதும், குறிப்பாகத் திருமணத் தடை நீங்கி நல்ல வரன் அமையும் மற்றும் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பதும் பக்தர்களின் தீராத நம்பிக்கையாக உள்ளது. இதன் காரணமாக, வல்லாள மகாராஜா கோபுரம் அருகில் உள்ள நந்தியம்பெருமானைத் தரிசிக்கத் திருவண்ணாமலை மாவட்டம் மட்டுமின்றிப் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் திரண்டு வந்திருந்தனர்.
சித்திரை தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு அண்ணாமலையார் கோவிலில் இன்று மாலை முழுவதும் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.




