கூடுவாஞ்சேரி காந்தி சாலையில் உள்ள தேவாலயக் கழிப்பறையில் வங்கி ஊழியர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுராந்தகத்தில் வங்கி ஊழியராகப் பணியாற்றி வந்த அவர், வேலைக்குச் செல்லும் வழியில் இத்தகைய விபரீத முடிவை எடுத்துள்ளார்.
கூடுவாஞ்சேரி அடுத்த ஆதனூர், எம்.ஜி. நகரைச் சேர்ந்தவர் பிரபாகரன் (47). இவர் மதுராந்தகத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) காப்பாளராகப் பணியாற்றி வந்தார். இவருக்கு மேனகா (42) என்ற மனைவியும், ரேஷ்மா (17) என்ற மகளும், யுகேஷ் (11) என்ற மகனும் உள்ளனர். பிரபாகரன் தினமும் தனது இருசக்கர வாகனத்தில் கூடுவாஞ்சேரி காந்தி சாலை வரை வந்து, அங்குள்ள சி.எஸ்.ஐ. ஆண்ட்ரூ தேவாலயம் அருகே வாகனத்தை நிறுத்திவிட்டு, பேருந்து மூலம் மதுராந்தகம் செல்வது வழக்கம்.
வழக்கம்போல இன்று காலை வீட்டிலிருந்து புறப்பட்டு வந்த பிரபாகரன், தேவாலய வளாகத்திற்குள் இருக்கும் கழிப்பறைக்குச் சென்றுள்ளார். அரை மணி நேரமாகியும் அவர் வெளியே வராததால் சந்தேகமடைந்த சர்ச் ஊழியர் டேவிட் பாஸ்கரன், கழிப்பறை கதவைத் தட்டியுள்ளார். நீண்ட நேரம் தட்டியும் கதவு திறக்கப்படாததால், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, நைலான் கயிற்றில் தூக்கில் தொங்கியபடி பிரபாகரன் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கூடுவாஞ்சேரி போலீசார், பிரபாகரனின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காகச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், பிரபாகரன் தற்கொலைக்கான காரணம் குறித்துப் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வங்கிப் பணியில் ஏற்பட்ட பணிச்சுமை காரணமாக இந்த முடிவை எடுத்தாரா அல்லது குடும்பப் பிரச்சினைகள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்துப் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் அமைந்துள்ள தேவாலயத்தில் வங்கி ஊழியர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்தத் தெருவில் சிறிது நேரம் பதற்றத்தை ஏற்படுத்தியது.





