செய்யூர் அருகே உள்ள தோட்டச்சேரி கிராம காப்புக்காடு பகுதியில் கோழி இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதால், சுற்றுச்சூழல் பாதிப்பும் தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர்.
குணாம்பேடு அருகே உள்ள இந்த காப்புக்காடு, தமிழ்நாடு வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இந்த வனப்பகுதியில் முயல், மயில், முள்ளம்பன்றி, மான் மற்றும் காட்டுப்பன்றி உள்ளிட்ட பல்வேறு விலங்கினங்கள் வாழ்ந்து வருகின்றன.
இப்பகுதியை ஒட்டியுள்ள குணாம்பேடு, வெண்ணாங்குப்பட்டு மற்றும் கடப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான கோழி இறைச்சி கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் இருந்து வெளியேறும் இறைச்சி கழிவுகள், இரவு நேரங்களில் காப்புக்காடு பகுதியில் சட்டவிரோதமாக கொட்டப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால், சாலையோரங்களில் கடுமையான துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர். மேலும், அருகிலுள்ள கிராமங்களில் இருந்து ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் மேய்ச்சலுக்காக இந்த பகுதிக்கு கொண்டு செல்லப்படுவதால், விலங்குகளுக்கும் கால்நடைகளுக்கும் தொற்று நோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.
வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தும் சிலர் தொடர்ந்து கழிவுகளை கொட்டி வருவதாக கூறப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் உடனடி ஆய்வு செய்து, காப்புக்காடு பகுதியில் இறைச்சி கழிவுகளை கொட்டும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





