ஆப்பூரில் சமுதாய நலக்கூடம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை – குடும்ப நிகழ்ச்சிகளுக்கு அவதி

0
1

ஆப்பூர் ஊராட்சியில் சமுதாய நலக்கூடம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆப்பூர் ஊராட்சியில் ஆப்பூர், சேந்தமங்கலம், தாமனேரி குன்னத்தூர் மற்றும் தாழிமங்கலம் உள்ளிட்ட பல கிராமங்களில் 1500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

அதிக மக்கள் தொகை கொண்ட இந்த பகுதியில் இதுவரை அரசு சார்பில் சமுதாய நலக்கூடம் அமைக்கப்படாததால், மக்கள் திருமணம், விழாக்கள் மற்றும் குடும்ப நிகழ்ச்சிகளுக்காக தனியார் மண்டபங்களை நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சிங்கப்பெருமாள் கோவில், வல்லக்கோட்டை மற்றும் மறைமலைநகர் பகுதிகளில் உள்ள தனியார் மண்டபங்களுக்கு செல்ல வேண்டியுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், தனியார் மண்டபங்களில் நிகழ்ச்சிகளை நடத்த ₹20,000 முதல் ₹50,000 வரை செலவாகிறது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்கள் பொருளாதார சுமையை சந்திக்கின்றனர் என தெரிவித்தனர்.

மேலும், ஆப்பூர் அரசு தோப்பு பகுதியில் சமுதாய நலக்கூடம் அமைக்க கடந்த ஆண்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும், ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினர்.

எனவே மாவட்ட நிர்வாகம் நேரடி ஆய்வு செய்து, பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டு புதிய சமுதாய நலக்கூடம் அமைக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.