செங்கல்பட்டு பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகள் அரசு நிர்ணயித்த நேரத்திற்கு முன்பே மூடப்படுவதாக பொதுமக்கள் மற்றும் மது நுகர்வோர் குற்றம்சாட்டியுள்ளனர். இரவு 10 மணி வரை செயல்பட வேண்டிய கடைகள், பல இடங்களில் 9.51 மணிக்கே மூடப்படுவதாக கூறப்படுகிறது.
இதனால், கடைசி நேரத்தில் மது வாங்க வரும் நுகர்வோருக்கு மது வழங்கப்படாமல், பின்னர் அருகிலுள்ள பார்கள் மற்றும் சில இடங்களில் கள்ளச்சந்தை முறையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக ஒரு மது பாட்டிலுக்கு ₹10 முதல் ₹20 வரை கூடுதலாக வசூலிக்கப்படுவதாக மது பிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நடைமுறை காரணமாக பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அரசு நிர்ணயித்த நேரத்திற்கு முன்பே கடைகள் மூடப்படுவது விதிமுறை மீறல் என்றும், இதனால் சிலர் கூடுதல் லாபம் ஈட்டுகின்றனர் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
செங்கல்பட்டு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள பல டாஸ்மாக் கடைகளில் இந்த பிரச்சினை தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக வார இறுதி நாட்களில் இந்த நிலை அதிகமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டு, அரசு விதிகளின்படி கடைகள் செயல்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தற்போது செங்கல்பட்டு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





