69% இடஒதுக்கீட்டை காக்க சமூகநீதி கணக்கெடுப்பு அவசியம்: அன்புமணி வலியுறுத்தல்

0
2

தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் விஜய் அறிவித்த பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதை ஒழிப்பு நடவடிக்கைகளை பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வரவேற்றுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெண்களுக்கு எதிரான குற்றங்களை கட்டுப்படுத்த சிறப்பு அதிரடிப்படை அமைப்பதும், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை ஒழிக்க காவல்துறையில் தனி பிரிவு உருவாக்கப்படுவதும் தற்போதைய தமிழக சூழலில் மிக அவசியமான நடவடிக்கைகள் என குறிப்பிட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவது சமூக அமைதிக்கு பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக அவர் தெரிவித்தார். அதேபோல், கஞ்சா, ஹெராயின் போன்ற போதைப்பொருட்களுடன் அரசின் சார்பில் விற்பனை செய்யப்படும் மதுவும் சமூக பாதிப்புகளுக்கு முக்கிய காரணமாக இருப்பதாக சுட்டிக்காட்டினார். ஆண்டுதோறும் லட்சக்கணக்கான குடும்பங்கள் மதுவால் பாதிக்கப்படுகின்றன என்றும், இதனை தடுக்கும் வகையில் டாஸ்மாக் கடைகளை படிப்படியாக மூடி முழுமையான மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும், தமிழ்நாட்டில் 69 சதவீத இடஒதுக்கீட்டை பாதுகாக்க உடனடியாக சாதிவாரி சர்வே எனப்படும் சமூகநீதி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் காரணமாக 69% இடஒதுக்கீட்டுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், அதனை தவிர்க்க சமூக அடிப்படையிலான தரவுகள் அவசியம் என்றும் கூறினார்.

தவெக தேர்தல் அறிக்கையிலேயே சமூகநீதி கணக்கெடுப்பு நடத்தப்படும் என உறுதி அளிக்கப்பட்டிருந்ததை நினைவுபடுத்திய அவர், அனைத்து சமூகங்களுக்கும் உரிய விகிதாச்சார பிரதிநிதித்துவம் கிடைக்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.