ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த சில நாட்களிலேயே, அக்கட்சியின் முன்னாள் முக்கிய நிர்வாகியும் மாநிலங்களவை எம்பியுமான சந்தீப் பதக் மீது பஞ்சாப் அரசு சட்ட ரீதியான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற தகவல் பஞ்சாப் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆம் ஆத்மி கட்சியின் முக்கியத் தலைவர்களான அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ராகவ் சதா இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, ராகவ் சதா பாஜகவில் இணைந்தார். அவருடன் சேர்த்து சந்தீப் பதக் உட்பட 7 மாநிலங்களவை எம்பிக்கள் ஒரே நேரத்தில் பாஜகவில் இணைந்தது ஆம் ஆத்மி கட்சிக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்பட்டது. பஞ்சாபில் பகவந்த் மான் தலைமையிலான அரசு அமைவதற்கு முக்கிய மூளையாகச் செயல்பட்டவர்களில் சந்தீப் பதக் முதன்மையானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் காவல்துறை இரண்டு வெவ்வேறு மாவட்டங்களில் சந்தீப் பதக் மீது வழக்குகளைப் பதிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஊழல் மற்றும் பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல் தொடர்பான புகார்கள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.
பிணையில் வர முடியாத பிரிவுகள்: முதல் தகவல் அறிக்கைகளில் ஜாமீனில் வெளிவர முடியாத (Non-bailable) கடுமையான பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இருப்பினும், இது குறித்துக் காவல்துறை இதுவரை அதிகாரப்பூர்வமான விரிவான அறிக்கை எதையும் வெளியிடவில்லை.
இந்த நடவடிக்கை குறித்து சந்தீப் பதக் கூறுகையில், தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது பற்றித் தனக்குத் தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றும், இது முற்றிலும் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் தெரிவித்துள்ளார். பாஜக தரப்பிலும் இது ஒரு “பழிவாங்கும் அரசியல்” என்று கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு பஞ்சாபில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முக்கியத் தலைவர்கள் கட்சி மாறுவதும், அவர்கள் மீது வழக்குப் பாய்வதும் அம்மாநில அரசியலில் அனலைப் பறக்கச் செய்துள்ளது.





