தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில், நாளை மறுதினம் (மே 1) வரவிருக்கும் சித்ரா பௌர்ணமி திருவிழாவையும் முன்னிட்டு, சென்னையிலிருந்து தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களின் எண்ணிக்கை கிளாம்பாக்கத்தில் இன்று பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் பயணிகளின் வருகையால் களைகட்டியுள்ளது.
தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டுத் தேர்வுகள் முடிவடைந்து கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையைக் கழிக்கத் திட்டமிட்டுள்ள சென்னைவாசிகள், தங்கள் குழந்தைகளுடன் சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டுள்ளனர். மேலும், மே 1-ம் தேதி வரும் சித்ரா பௌர்ணமி தினமானது குலதெய்வ வழிபாட்டிற்கு உகந்த நாள் என்பதால், தென் மாவட்டங்களில் உள்ள புகழ்பெற்ற திருத்தலங்களுக்குச் செல்ல மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து மாநகரப் பேருந்துகள் மற்றும் மின்சார ரயில்கள் வழியாக மக்கள் சாரை சாரையாகக் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர்.
சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு மதுரை, திருச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் உள்ள கோயில்களில் சிறப்புத் திருவிழாக்கள் நடைபெற உள்ளன. இதற்காகச் சிறு குழந்தைகள் மற்றும் முதியவர்களுடன் பொதுமக்கள் அதிக அளவில் பேருந்து நிலையத்திற்கு வருகை தருவதால், நடைமேடைகள் அனைத்தும் பயணிகளால் நிரம்பி வழிகின்றன. பயணிகளின் வசதிக்காகத் தென் மாவட்டங்களுக்குக் கூடுதல் பேருந்துகளை இயக்கப் போக்குவரத்துத் துறை நடவடிக்கை எடுத்துள்ள போதிலும், கட்டுக்கடங்காத கூட்டத்தால் கிளாம்பாக்கம் முனையம் தற்போது திணறி வருகிறது. தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கக் கூடுதல் போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.





