செய்யூரில் தேர்தல் மோதல்: சுவர் விளம்பரம் எழுதுவதில் விசிக – அதிமுகவினர் இடையே கைகலப்பு!

0
7

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே சுவர் விளம்பரம் எழுதுவதில் ஏற்பட்ட தகராறில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் அதிமுகவினர் இடையே பயங்கர மோதல் வெடித்தது. இதில் காயமடைந்த இரு தரப்பினரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தேவராஜாபுரம் பகுதியில் இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது. தேர்தல் பரப்புரை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தங்கள் கட்சி வேட்பாளர்களை வரவேற்றுச் சுவர்களில் விளம்பரம் செய்யும் பணியில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தேவராஜாபுரம் பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி மூர்த்தி (60) என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த விசிக நிர்வாகி முருகன் (40) என்பவருக்கும் இடையே குறிப்பிட்ட ஒரு சுவரில் விளம்பரம் எழுதுவது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

முதலில் சொல்லடிச் சண்டையாகத் தொடங்கிய இந்த விவகாரம், சிறிது நேரத்தில் இரு தரப்புக்கும் இடையேயான மோதலாக மாறியது. ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதில் இருவருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டன. இதையடுத்து, காயமடைந்த மூர்த்தி மற்றும் முருகன் ஆகிய இருவரும் உடனடியாக மீட்கப்பட்டுச் செய்யூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தேர்தல் நேரத்தில் வேட்பாளரை வரவேற்கச் சுவர் விளம்பரம் செய்வது தொடர்பாக ஏற்பட்ட இந்த மோதல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து இரு தரப்பினரும் அளித்த புகாரின் அடிப்படையில், செய்யூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், மோதலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனப் போலீசார் எச்சரித்துள்ளனர்.