திருப்போரூர் கோவில் நிதியில் மருத்துவக் கல்லூரி வேண்டும்

0
7

செங்கல்பட்டு மாவட்டத்தின் ஆன்மீக அடையாளமாகவும், வருவாய் ஈட்டும் முக்கியத் தலமாகவும் விளங்கும் திருப்போரூர் கந்தசுவாமி கோவில் நிர்வாகத்தின் கீழ் ஒரு மருத்துவக் கல்லூரியைத் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை பகுதி மக்களிடையே எழுந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில், மாவட்டத்திலேயே அதிக வருமானம் ஈட்டும் கோவில்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

சென்னை மற்றும் காஞ்சிபுரம் மட்டுமின்றி, மாநிலம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினசரி இங்கு வருகின்றனர். திருமண விசேஷங்கள், வேண்டுதல் நிறைவேற்றுதல் எனத் திருப்போரூர் பகுதி எப்போதும் மக்கள் கூட்டத்தால் களைகட்டுகிறது.

கோவில் நிலக் குத்தகை, பிரசாதக் கடைகள், வாகன நிறுத்தம், அர்ச்சனை, மொட்டை அடித்தல் மற்றும் அபிஷேகம் போன்ற கட்டணங்கள் வாயிலாக ஆண்டுதோறும் சுமார் ₹6 கோடி வரை வருமானம் கிடைக்கிறது. திருப்போரூர் மற்றும் தண்டலம் உள்ளிட்ட பகுதிகளில் இக்கோவிலுக்குச் சொந்தமாக சுமார் 600 ஏக்கர் நிலங்கள் உள்ளன. திருப்போரூர் வழியாக அமைக்கப்படும் ஆறுவழிச் சாலைத் திட்டத்திற்காகக் கோவிலுக்குச் சொந்தமான சில இடங்கள் ஏற்கனவே கையகப்படுத்தப்பட்டுள்ளன.

கோவிலுக்குச் சொந்தமான பெருமளவு நிலங்கள் பயன்பாடின்றி இருக்கும் நிலையில், அந்த இடங்களில் ஒரு மருத்துவக் கல்லூரியைக் கட்டினால், அது அப்பகுதி மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் பெரும் பயனாக அமையும் எனச் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

கோவில் வருமானத்தைப் பக்தர்களின் வசதிக்காகவும், கல்வி மற்றும் மருத்துவப் பணிகளுக்காகவும் பயன்படுத்தலாம் என்ற இந்து சமய அறநிலையத்துறையின் கொள்கைப்படி, திருப்போரூரில் ஒரு மருத்துவக் கல்லூரியை அமைக்க வேண்டும் என்பதே இந்தப் பகுதி மக்களின் நீண்ட கால விருப்பமாகும். இதன் மூலம் இப்பகுதி ஒரு சிறந்த கல்வி மையமாக மாறுவதுடன், ஏழை எளிய மாணவர்களுக்குக் குறைந்த கட்டணத்தில் மருத்துவக் கல்வி கிடைக்க வழிவகை ஏற்படும்.

அரசு மற்றும் அறநிலையத்துறை இந்த விவகாரத்தில் தலையிட்டு, திருப்போரூர் கந்தசுவாமி கோவில் சார்பில் மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.