இன்ஸ்டாகிராமில் போலி கணக்குகள் உருவாக்கி இளம்பெண்ணின் போலியான அந்தரங்க புகைப்படங்களை பதிவிட்டு அவதூறு பரப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், கரூரை சேர்ந்த சிவபிரகாஷ் என்ற இளைஞர் இந்த செயலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில், புகாரளித்த பெண்ணை அவர் ஒருதலையாக காதலித்து வந்ததும் தெரியவந்தது. அந்த காதலை வெளிப்படுத்த முடியாமல் இருந்த அவர், சமூக வலைதளங்களில் போலி கணக்குகளை உருவாக்கி, பெண்ணின் போலியான அந்தரங்க புகைப்படங்களை பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்த திட்டமிட்டிருந்தார்.
இதன் மூலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் ஆறுதல் கூறும் பெயரில் நெருக்கம் ஏற்படுத்தி, பின்னர் காதல் வலையில் சிக்கவைக்க முயன்றதாகவும் அவர் போலீசாரிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்தும் நபர்கள் குறித்து மீண்டும் எச்சரிக்கை எழுப்பியுள்ளது. பெண்கள் சமூக வலைதளங்களில் தங்களது தனிப்பட்ட தகவல்கள் மற்றும் புகைப்படங்களை பகிரும்போது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.





